கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல் போராட்டம் நடத்த முடிவு


கோரிக்கைகளை வலியுறுத்தி  ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல் போராட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 17 March 2017 3:45 AM IST (Updated: 16 March 2017 6:40 PM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம்,

வேலை நிறுத்தம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர் மற்றும் கணினி இயக்குனர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் குடும்பநல ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் அளவில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், 11 யூனியன் அலுவலகங்களில் பணிபுரியும் 500–க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்கள், கவுன்சிலர்கள் இல்லாத நிலையில் அனைத்து பணிகளையும் வளர்ச்சித்துறை பணியாளர்களே கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளில் பணிகள் முடங்கியுள்ளன.

மறியல் போராட்டம்

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கூறும்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். கோரிக்கைகள் தொடர்பாக சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாய்மொழியாக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. இது போதாது. உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.

எனவே எங்களது போராட்டம் தொடரும். அடுத்த கட்டமாக ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.


Next Story