கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்


கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்
x
தினத்தந்தி 17 March 2017 4:30 AM IST (Updated: 16 March 2017 7:20 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்,

காலி பணியிடங்கள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைபடுத்த வேண்டும், கிராமிய தபால் ஊழியர்களை இலாகா ஊழியர்களாக ஏற்றுக்கொண்டு அதற்குரிய பணப்பலன்களை வழங்க வேண்டும், அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்,

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருங்காலங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள விகிதங்களை மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்திருந்தது.

வேலை நிறுத்த போராட்டம்

அதன்படி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடலூர் மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் தலைமை தபால் நிலையத்தில் தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கடலூர் கோட்ட செயலாளர் ராமசாமி தலைமையில், அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர்கள் அறிவரசு, ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

இதனால் தபால் நிலையத்தில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து தபால் நிலையம் பூட்டப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் தபால் நிலையத்துக்கு வெளியில் வந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம், அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்

இதேபோல் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தலைமை தபால் நிலைய ஊழியர்களும் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க 3–ம் பிரிவு கோட்ட தலைவர் ரவி தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் செந்தில்குமார், நிர்வாகி குணசேகர் உள்பட தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். ஊழியர்களின் இந்த போராட்டத்தால் தலைமை தபால் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. தபால் நிலையத்துக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

1,000 பேர் பங்கேற்பு

இது பற்றி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் அறிவரசு கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 3 தலைமை தபால் நிலையங்கள், 90 துணை தபால் நிலையங்கள், 450 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இதில் 1,500 மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 1,000 பேர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கீகரிக்கப்படாத சங்கத்தை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் பணிக்கு சென்றுள்ளனர். ஊழியர்களின் இந்த போராட்டத்தில் தபால் நிலைய சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன என்றார்.

வருமான வரி அலுவலகம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் வருமான வரி அலுவலக ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை 27 பேரும் வேலையை புறக்கணித்தனர். இதனால் அலுவலகம் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story