தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலங்கியம்,
தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட சென்னாக்கல்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், டி.எஸ்.பி. நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் சீராக வழங்க வேண்டும் எனக்கேட்டு, நேற்று தாராபுரம்– உடுமலை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ‘‘சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட எங்கள் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நாங்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நாங்கள் பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் சந்தித்து மனுகொடுப்பதற்காக செலாம்பாளையத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தோம். அப்போது அங்கு இருந்தவர்கள் செயல் அலுவலர் தற்போது அலுவலகத்தில் இல்லை என்று கூறினர். எனவே பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குடிநீர் கேட்டும் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்’’ என்று கூறினர்.
போக்குவரத்து பாதிப்புசாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், அலங்கியம் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரை:ந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் வந்து எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறி சாலை மறியலை கைவிட மறுத்தனர்.
அதன் பின்பு பேரூராட்சி செயல் அலுவலர் கீதாபிரபு நேரில் வந்து சென்னாக்கல்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், டி.எஸ்.பி. நகர் ஆகிய பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் தாராபுரம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், பேரூர் செயலாளர் பிரதாப்மூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் நாட்டுத்துரை, பொன்னுச்சாமி உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.