கீழ்பென்னாத்தூரில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தி ஊர்வலம்
கீழ்பென்னாத்தூரில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் அரசு மற்றும் புறம்போக்கு இடங்களில் காணப்படும் சீமைக்கருவேல மரங்களை அரசு சார்பில் அகற்றி வரும் நிலையில் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிடவும், சீமைக்கருவேல மரங்களை அகற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி செயல் அலுவலர் மோகன் கொடியசைத்து ஊர்வலத்தை வைத்தார். இதில் பள்ளி மாணவ–மாணவிகள், ஆசிரியர் பயிற்சி மாணவ–மாணவிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் திருவண்ணாமலை சாலை, திண்டிவனம் சாலை, அவலூர்பேட்டை ரோடு, காந்தி தெரு மற்றும் கீழ்பென்னாத்தூர் நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீர் நிலைகளை பாதுகாத்திடவும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திடக்கோரியும் கோஷங்கள் எழுப்பியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊர்வலத்தில் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் வீரமணி, அலுவலக பணியாளர்கள் சுரேஷ், ஆனந்தன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.