ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2017 2:45 AM IST (Updated: 16 March 2017 8:29 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 3–வது நாளாக நடந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டன.

வேலை நிறுத்த போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கணினி இயக்குபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு பட்டியல் வரம்பை உயர்த்த வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 14–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3–வது நாளாக நேற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நேற்று மதியம் 12 மணியளவில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சங்க மாநில துணைத்தலைவர் பாரி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் பலர் பேசினார்கள். தொடர்ந்து 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 100–க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 3–வது நாளாக நடந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டத்தால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன.



Next Story