மதுரையில் பிளஸ்–2 மாணவர் கொலையில் 3 சிறுவர்கள் கைது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி வந்த மாணவரும் சிக்கினார்
மதுரையில் பிளஸ்–2 மாணவர் கொலையில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை மகால் 7–வது தெருவை சேர்ந்தவர் குமரேஷ்பாபு. இவருடைய மகன் நாகராஜ்(வயது 17). அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு கீழவெளிவீதி பகுதியில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது 3 பேர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தினர். மேலும் அந்த கும்பல் அவரது செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றது. கத்தியால் குத்தப்பட்டதில் தொடையில் இருந்து ரத்தம் அதிகம் வெளியேறியதால் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
3 பேர் கைதுஅப்போது போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அதில் அங்கிருந்த ஒரு காமிராவில் 3 பேர் அந்த வழியாக தப்பி ஓடியது தெரியவந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பிளஸ்–2 மாணவனின் போனின் ஐ.எம்.இ.ஐ. நம்பரை வைத்து மாணவரிடம் பறிக்கப்பட்ட செல்போன் எங்கு உள்ளது என கண்டறிந்தபோது, மதிச்சியம் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் அருப்புக்கோட்டையில் பதுங்கி கட்டிட வேலை பார்த்து வந்த 2 சிறுவர்களையும், மதிச்சியம் பகுதியில் வீட்டில் இருந்த ஒரு சிறுவனையும் பிடித்து விசாரித்தனர். அதில் நாகராஐ அவர்கள் 3 பேரும் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், 3 சிறுவர்களையும் நேற்று கைது செய்தனர்.
சிறுவர்கள்இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:–
நாகராஜ் கொலை வழக்கில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, சம்பவத்தன்று நாகராஜ் வீட்டிற்கு நடந்து சென்றபோது, சிறுவர்கள் 3 பேரும் அவரை வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்கள் அவசரமாக ஒருவருக்கு போன் பேச வேண்டும் என்று செல்போனை கேட்டுள்ளனர். அப்போது நாகராஜ் தன்னுடைய போனில் பணம் இல்லாததால் அடுத்தவருக்கு பேச முடியாது என்று கூறியுள்ளார். உடனே அவர்கள் தங்கள் சிம்கார்டை போட்டு பேசிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நாகராஜ் போனை கொடுத்த உடன், அவர்கள் சிம்கார்டை போட்டு செல்போனில் பேசிக் கொண்டே அங்கிருந்து வேகமாக சென்றுள்ளனர். இதை பார்த்த நாகராஜ் அவர்களிடம் செல்போனை தந்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தான் நாகராஜ் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒருவர் மாணவர்கைது செய்யப்பட்ட 2 சிறுவர்கள் மீது ஏற்கனவே மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்கு உள்ளது. கைதான மற்றொரு சிறுவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி வந்தவன். இந்த வழக்கில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா குற்றவாளிகளை கண்டறிய பெரிதும் உதவியாக இருந்தது.
கடந்த ஓராண்டாக 33 வழக்குகளில் 52 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வந்தவர்கள் ஆவர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது துணை கமிஷனர்கள் அருண்சக்திகுமார், பாபு, ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.