அரசு ஆஸ்பத்திரியில் பெட் ஸ்கேன் வசதி ஏற்படுத்த தாமதம்: சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


அரசு ஆஸ்பத்திரியில் பெட் ஸ்கேன் வசதி ஏற்படுத்த தாமதம்: சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 March 2017 4:00 AM IST (Updated: 16 March 2017 9:47 PM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரியில் பெட் ஸ்கேன் வசதி ஏற்படுத்த தாமதம் ஆனது

மதுரை,

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்த கார்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில், புற்றுநோயியல் பிரிவில் பெட் ஸ்கேன் வசதியை ஏற்படுத்தக்கோரி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தேன்.

இந்த வழக்கில் பெட் ஸ்கேன் வசதியை ஒரு மாதத்தில் ஏற்படுத்த வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் 2–ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 2 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தாமதம் ஏன்

அப்போது, “ஏழை மக்களின் நலனுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஆவது ஏன்“ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “ஸ்கேன் வசதியை ஏற்படுத்துவதற்கான திட்ட முன்மொழிவு அனுப்பப்பட்டு உள்ளது. நிதித்துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்“ என்று தெரிவித்தார்.

மேலும், சுகாதார வசதிக்காக ஆண்டு தோறும் ரூ.3 ஆயிரம் கோடியை அரசு ஒதுக்குவதாகவும், இந்த நிதிநிலை அறிக்கையில் பெட்ஸ்கேன் கருவிக்கான நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பதில் அளிக்க உத்தரவு

இதையடுத்து இந்த வழக்கு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை வருகிற 24–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story