திருப்பூர் சத்தியாகாலனி பகுதியில் மதுக்கடை திறப்பதற்கான பணிகளை கைவிட வேண்டும்
திருப்பூர் மண்ணரை சத்தியா காலனி, பகுதியில் மதுக்கடை திறப்பதற்கான பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்
திருப்பூர்,
திருப்பூர் மண்ணரை சத்தியா காலனி, பகுதியில் மதுக்கடை திறப்பதற்கான பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பிய அவர்கள் கலால்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
சத்தியா காலனி 10–வது வீதி, கேட்டு தோட்டம் செல்லும் பாதையில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எங்கள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளாக இருப்பதாலும், பள்ளிக்கூடம், கோவில், மருத்துவமனை, பனியன் நிறுவனங்கள் இருப்பதாலும் இந்த மதுபான கடை அமைந்தால் பெரும் சிரமங்கள் ஏற்படும். பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே எங்கள் பகுதியில் அமைய இருக்கும் இந்த டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்க கூடாது. இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்கான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.