மாயார் மின்நிலையத்திற்கு தண்ணீர் செல்லும் ராட்சத குழாய்களுக்கு இடையே சிக்கிய காட்டெருமை 7 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு
மாயார் மின்நிலையத்திற்கு தண்ணீர் செல்லும் ராட்சத குழாய்களுக்கு இடையே காட்டெருமை சிக்கி கொண்டது.
மசினகுடி,
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள மாயார் பகுதியில் பழமை வாய்ந்த நீர்மின் நிலையம் உள்ளது. சிங்காரா, மரவகண்டி ஆகிய மின்நிலையங்களில் இருந்து வெளியில் வரும் தண்ணீரானது மாயார் அணையில் தேக்கி வைக்கபட்டு பின்னர் அந்த தண்ணீரானது ராட்சத குழாய்கள் மூலம் மாயார் பள்ளத்தாக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள மின்நிலையத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது மாயார் பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக இந்த ராட்சத குழாய்களின் நடுவில் உள்ள புற்களை சாப்பிடுவதற்காக 10 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் காட்டெருமை நேற்று காலை சென்றது. குழாய்களின் நடுவில் இருந்த புற்களை மேய்ந்த அந்த காட்டெருமை இரண்டு ராட்சத குழாய்களின் நடுவில் இருந்து வெளியில் வர வழி தெரியாமல் தவித்தது.
7 மணி நேர போராட்டம்இதனை கண்ட மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை மசினகுடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மசினகுடி வனச்சரகர் சடையப்பன், முதுமலை கால்நடை மருத்துவர் விஜய ராகவன், வனவர் சந்தன ராஜ் உள்பட வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் ராட்சத குழாய்களின் நடுவில் இருந்து வெளியில் வர வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்த அந்த காட்டெருமை வெளியில் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டது. சுமார் 7 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த காட்டெருமை பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னர் அந்த காட்டெருமைக்கு பசுந்தீவனம் போடபட்டது. அதனை சாப்பிட்ட அந்த காட்டெருமைக்கு உடலில் ஏற்பட்டிருந்த சிறு காயங்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த காட்டெருமை மாயார் வனபகுதிக்குள் சென்றது.