பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
தேனி,
தேனி மாவட்டம், போடி ஜே.கே.பட்டி பாரதிநாராயணசாமி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சிமெண்டு விற்பனை கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி சாந்தி (வயது 41). பாலமுருகனின் சிமெண்டு கடையில் சாந்தியின் சித்தப்பாவான திண்டுக்கல் சோலைஹால் தியேட்டர் அருகே வசிக்கும் பழனிச்சாமி (72) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். சாந்திக்கும், அவருடைய சித்தப்பா பழனிச்சாமிக்கும் சொத்துப் பிரச்சினை இருந்துள்ளது.
சொத்துப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு ஏப்ரல் 12–ந்தேதி சாந்தி தனது வீட்டில் இருந்த போது அங்கு வந்த பழனிச்சாமி அவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது பழனிச்சாமி மறைத்து வைத்து இருந்த கத்தியால் சாந்தியை குத்தி, கொலை செய்ய முயன்றார். இதில் சாந்திக்கு 6 இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
10 ஆண்டுகள் சிறைஇந்த சம்பவம் குறித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் போலீஸ் துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி தனியரசு நேற்று தீர்ப்பு கூறினார்.
சாந்தியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜராஜேஸ்வரிக்கும், சிறப்பாக துப்பு துலங்கிய போலீசாருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டு தெரிவித்தார்.