அரிசி வாங்கி ஏமாற்றியவரிடம் போலீசார் விசாரணை கோவை வியாபாரிடம் ரூ.12 லட்சம் மோசடி
கோவை வியாபாரிடம் அரிசி வாங்கி ரூ.12 லட்சம் மோசடி
சரவணம்பட்டி,
கோவை கணபதிபுதூர் பகுதியை சேர்ந்த வேலு. அவருடைய மகன் பால்வண்ணன் (வயது 38). இவர் கணபதியில் அரிசி மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கோபி (30) என்பவர் 3 மாதங்களுக்கு முன்பு பால்வண்ணனிடம் அரிசி மூட்டைகளை ரொக்கப்பணம் கொடுத்து தொடர்ந்து வாங்கி வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பால்வண்ணனின் அரிசி மண்டிக்கு 800 மூட்டை அரிசி வந்து இறங்கியது. இதை அறிந்து கொண்ட கோபி, தனக்கு பெரிய அளவில் ‘ஆர்டர்’ கிடைத்துள்ளது என்று கூறி பால்வண்ணனிடம் 800 மூட்டை அரிசி உடனடியாக வேண்டும் என கேட்டார். மேலும், அந்த அதற்காக ரூ.12 லட்சத்திற்கான காசோலையை பால்வண்ணனிடம் கொடுத்து விட்டு அரிசி மூட்டைகளை கோபி வாங்கிச் சென்றார்.
விசாரணைஆனால் அவர் கொடுத்த காசோலையின் வங்கிக்கணக்கில் பணம் இல்லை. இதுகுறித்து பால்வண்ணன் கோபியிடம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். சம்பவம் நடந்து 3 மாதங்களாகியும் பால்வண்ணனுக்கு, கோபி பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கோவை மாநகர் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. தற்போது சரவணம்பட்டி பகுதியிலும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.