ஓய்வூதியத்தை உடனே வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்
ஓய்வூதியத்தை உடனே வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 1–ந் தேதி ஓய்வூதிய தொகை அவரவர் வங்கி கணக்கின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களாக 1–ந் தேதியன்று ஓய்வூதிய தொகையை வழங்காமல் 5–ந் தேதி மற்றும் 15–ந் தேதிகளில் 2 தவணையாக ஓய்வூதிய தொகை பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய தொகையை எளிதில் பெற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 21–ந் தேதி தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 2 தவணையாக ஓய்வூதியம் வழங்குவதை தவிர்த்து மார்ச் 15–ந் தேதி முதல் மாதந்தோறும் ஒரே தவணையாக ஓய்வூதியம் வழங்குவதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால் அதுபோன்று ஒரே தவணையாக ஓய்வூதியம் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காத்திருக்கும் போராட்டம்இந்த ஓய்வூதிய தொகையை உடனே வழங்கக்கோரியும், இனி மாதந்தோறும் 1–ந் தேதியன்றே ஓய்வூதியம் வழங்கக்கோரியும், 2013–ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் அனைத்தையும் உடனே வழங்கக்கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 9 தலைமை அலுவலகங்கள் முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலக நுழைவுவாயில் முன்பு நேற்று காலை விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மண்டலங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து காத்திருக்கும் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்திற்கு காஞ்சீபுரம் கிளை தலைவர் சம்மந்தம் தலைமை தாங்கினார். விழுப்புரம் கிளை தலைவர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். கிளை செயலாளர்கள் வேலூர் கோவிந்தசாமி, திருவண்ணாமலை லட்சுமிநாராயணன், விழுப்புரம் ராமச்சந்திரன், விழுப்புரம் கிளை நிர்வாகக்குழு உறுப்பினர் சகாதேவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்கள்.
இதில் விழுப்புரம் கிளை பொருளாளர் சேஷையன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, கருணாமூர்த்தி, பலராமன், பிச்சாண்டி, பாலசுந்தரம், இமயவரம்பன், சுந்தரம், பழமலை, சின்னராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் கிளை நிர்வாகக்குழு உறுப்பினர் பலராமன் நன்றி கூறினார்.
இதுபற்றி போராட்டக்குழுவினர் கூறுகையில், மாதந்தோறும் 1–ந் தேதியன்றே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், பிப்ரவரி மாதத்திற்குரிய ஓய்வூதிய தொகை எங்களுடைய வங்கி கணக்கில் சேரும் வரை காத்திருக்கும் போராட்டம் தொடரும் என்றனர்.