விழுப்புரம் அருகே 3 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே 3 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 61). இவர் அங்குள்ள மெயின் ரோட்டில் அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு கலியபெருமாள் தனது வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதேபோல் விழுப்புரம் விராட்டிக்குப்பம் விநாயகா நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (46). இவருடைய மளிகை கடையின் கதவு பூட்டை நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.
இதே கொள்ளை கும்பல், இந்த கடைக்கு பக்கத்தில் இருக்கும் ரமேசின் மனைவி சித்ரா (36) என்பவருடைய அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.500–ஐ திருடிச்சென்றுள்ளனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சுஇதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்–இன்ஸ்பெக்டர்கள் மருதப்பன், சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த 3 கடைகளிலும் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதுபற்றி கலியபெருமாள், சம்பத்குமார், சித்ரா ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒரே நாளில் 3 கடைகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.