திருப்புல்லாணி கோவிலில் 13–ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு மாணவ–மாணவிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு


திருப்புல்லாணி கோவிலில் 13–ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு மாணவ–மாணவிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 17 March 2017 4:30 AM IST (Updated: 17 March 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்புல்லாணி கோவிலில் 13–ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டை பள்ளி மாணவ–மாணவிகள் ஆய்வில் கண்டுபிடித்து உள்ளனர்.

ராமநாதபுரம்,

ஆய்வு

கல்வி இணை செயல்பாடுகள் மூலம் மாணவர்களிடம் பல்வேறு சமூக பண்புகளை வளர்க்க பள்ளிகளில் பலவித மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் சாதனையாக பேசப்பட்டுவரும் இந்த காலகட்டத்தில், இத்தகைய மன்றங்களில் மாணவர்களை ஈடுபடுத்துவது சற்று கடினமான காரியமாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ்சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்களுக்கு பாரம்பரியம் பற்றி சொல்லித்தரப்படுவதுடன் அது பற்றிய நேர்முக பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

பழங்கால கல்வெட்டுகளை படி எடுக்கவும், படிக்கவும் பயிற்சி பெற்றுள்ள இந்த மன்றத்தை சேர்ந்த அபர்ணா, விசாலி, அபிநயா, சினேகா, விஜய், ராஜபாண்டியன், ராஜ்கண்ணா ஆகிய மாணவ– மாணவிகள் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். இதில் ஏற்கனவே படி எடுக்காத சில துண்டுக் கல்வெட்டுகள் பட்டாபிஷேக ராமர் சன்னதி அருகில் இருப்பதை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டுகளை தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு வழிகாட்டுதலின்பேரில் படி எடுத்து படித்தனர்.

துண்டுக்கல்வெட்டுகள்

இதுபற்றி ஆசிரியர் ராஜகுரு கூறியதாவது:– ராமபிரான் இலங்கையில் இருந்து திரும்பி வந்தபோது திருப்புல்லாணியில் பட்டாபிஷேகம் செய்துகொண்டதாக இந்த கோவில் தலவரலாறு கூறுகிறது. அதை நினைவூட்டும் விதத்தில் இங்கு பட்டாபிஷேக ராமருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் ராமபிரான், லட்சுமணன் சீதையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

பிற்காலப் பாண்டியர் கலை அமைப்பில் உள்ள இந்த சன்னதியில் துண்டுக்கல்வெட்டுகள் பல உள்ளன. ஆனால் அவை சிதைந்த நிலையில் இருப்பதால் அவற்றின் செய்தியை முழுமையாக அறிந்துகொள்ள இயலவில்லை.

இக்கல்வெட்டுகளின் எழுத்து அமைப்பை கொண்டு இவை 13–ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் என அறிய முடிகிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய சில கல்வெட்டுகள் மூலம் சில செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. இவற்றில் எதிலும் மன்னர் பெயர் இல்லை. இரு கல்வெட்டுகளில் கீழ்ச்செம்பி நாட்டு திருப்புல்லாணி திருப்பதி ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இக்கோவில் என எழுதப்பட்டு உள்ளது. ஒரு கல்வெட்டு கோனேரின்மை கொண்டான் எனும் அரசாணை கல்வெட்டு ஆகும்.

ஆனந்தூர்

பள்ளிச்சந்தம் கொடுத்த தகவல் இருப்பதன் மூலம் இப்பகுதியில் சமண, புத்த பள்ளிகள் இருந்திருப்பதை அறியமுடிகிறது. இதில் குறிப்பிட்டுள்ள சிவகாம சுந்தரநல்லூர் திருவாடானை அருகில் உள்ள ஆனந்தூராக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். கல்வெட்டுகளை படி எடுத்து படித்துச்சொன்ன மாணவ–மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் பிரேமா, கோவில் பேஸ்கார் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.


Next Story