குடிமராமத்து திட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் கூடுதல் குளங்களை தூர்வார வேண்டும் வசந்தகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
குடிமராமத்து திட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் கூடுதல் குளங்களை தூர்வார வேண்டும் என வசந்தகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை,
குடிமராமத்து திட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் கூடுதல் குளங்களை தூர்வார வேண்டும் என வசந்தகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடுகுடிமராமத்து திட்டம் என்பது வறண்டு கிடக்கும் குளங்களையும், ஏரிகளையும் தூர்வாரும் திட்டம் ஆகும். இந்த திட்டத்துக்கு தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள குளங்கள் தூர்வாரப்படுகின்றன.
நாங்குநேரி தொகுதியில் 10 குளங்கள் மேற்கண்ட திட்டத்தில் தூர்வாரப்படுகின்றன. இந்த திட்டத்தில் ஒரு விவசாயியையும், ஒரு பொதுப்பணித்துறை என்ஜினீயரையும் சேர்த்துள்ளனர். குளத்தின் அளவை பொருத்து நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நாங்குநேரியை பொறுத்தவரை ஏராளமான குளங்கள் வறண்டு கிடக்கின்றன. அதனால் கூடுதல் நிதி ஒதுக்கி அதிக குளங்களை தூர்வார வேண்டும்.
எனது சொந்த செலவில்தற்போது பருவமழை பொய்த்து விட்டதால், கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். பல குளங்களுக்கு எனது சொந்த செலவில் சில இடங்களில் மராமத்து பணிகள் செய்துள்ளேன். கோடை காலத்துக்குள் அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டும் என்பது தான் எனது விருப்பம். எத்தனை குளங்களை தூர்வாருகிறது என்பது பார்க்க வேண்டும். சரியாக தூர்வாரப்படுகிறதா? என்பதை மாவட்ட நிர்வாகமும், பொது மக்களும் கண்காணிக்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை திட்டத்தில் பல தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் வந்துள்ளது. வேலை செய்த தொழிலாளர்களுக்கு அரசு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயம் பாதிக்கப்படும்கங்கைகொண்டான், சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும். தொடர்ந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க அனுமதித்தால் விவசாயம் பாதிக்கப்படும். ராதாபுரத்தில் சில தொழிற்சாலைகளை மாவட்ட நிர்வாகம் மூடுவதற்கு உத்தரவிட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
முன்னதாக அவர், விவசாயிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், முன்னாள் கவுன்சிலர் விஜயன், சிவாஜி சமூக நல பேரவை கவுரவ ஆலோசகர் சிவகுமார், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.