கெங்கவல்லி அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலைமறியல்
கெங்கவல்லி தாலுகாவில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 100 நாள் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
கெங்கவல்லி,
கெங்கவல்லி தாலுகாவில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 100 நாள் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு கூலித்தொகை மாதந்தோறும் வங்கிகள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்களுக்கு கூலி வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் புகார் கூறி வந்தனர்.
மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் வங்கிக்கு கூலித்தொகை சென்றடைய காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 74–கிருஷ்ணாபுரம் ஊராட்சியை சேர்ந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு உடனடியாக கூலி வழங்க வேண்டும் என்று கூறி தம்மம்பட்டி–கெங்கவல்லி சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கெங்கவல்லி போலீசார் அங்கு விரைந்து சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்கள். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.