வனவிலங்கு வாரியத்திடம் முன்அனுமதி பெறாமல் இயங்கும் கல் குவாரிகளுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு
வனவிலங்கு வாரியத்திடம் முன்அனுமதி பெறாமல் இயங்கும் குவாரிகளுக்கு தடை
மதுரை,
தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–
5 எக்டேர் பரப்புக்கு மேல் கல் குவாரிகள் நடத்துவதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதி போதுமானதாக இருந்தது. ஆனால் 5 எக்டேருக்கும் குறைவான நிலப்பரப்பில் குவாரி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2012–ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை பருவ மாறுபாடு அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்குள் இயங்கும் அனைத்து குவாரிகளும் தேசிய வன விலங்கு வாரியத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்தது.
தடைவிதிக்க வேண்டும்ஆனால், திசையன்விளை பகுதியில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் உள்பட தூத்துக்குடி கட்டாளங்குளம், கீழவல்லநாடு, பத்மநாபமங்கலம் ஆகிய பகுதிகளில் விதிகளை மீறி குவாரிகள் நடத்தப்படுகின்றன. வல்லநாடு வன உயிரின சரணாலயத்தில் அரிய வகை மான்கள் உள்ளன. இந்த சரணாலயத்தின் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள், தேசிய வன விலங்கு வாரியத்தின் முன் அனுமதி பெறாமல் பல குவாரிகள் இயங்கி வருகின்றன. இதற்கு அரசு அதிகாரிகளும் துணை போகிறார்கள். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே வல்லநாடு பகுதியில், தேசிய வன விலங்கு வாரியத்தின் நிலைக்குழுவிடம் முன் அனுமதி பெறாமல் இயங்கும் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். வல்லநாடு சுற்றுச்சூழல் பகுதியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
பதில் அளிக்க உத்தரவுஇந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், தேசிய வன விலங்கு வாரிய செயலாளர், மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 24–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.