காகித விலை உயர்வை கண்டித்து அட்டை பெட்டி உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடங்கியது நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு


காகித விலை உயர்வை கண்டித்து அட்டை பெட்டி உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடங்கியது நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 17 March 2017 4:30 AM IST (Updated: 17 March 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

காகித விலை உயர்வை கண்டித்து அட்டை பெட்டி உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடங்கியது.

திருப்பூர்,

மூலப்பொருட்கள் விலைஉயர்வு

திருப்பூர் பின்னலாடைகளை தயாரித்து வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதில் அட்டை பெட்டிகள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 400–க்கும் மேற்பட்ட அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் ஆடைகள் மற்றும் உணவு பொருட்களை பாதுகாப்பான முறையில் அனுப்பி வைப்பதற்காகவும் அட்டை பெட்டிகளை தயாரித்து வருகின்றன.

இதன்படி நாளொன்றுக்கு தேவையான அட்டை பெட்டிகள் தயாரிக்க 1000 டன் காகிதங்கள் அட்டை பெட்டி தொழிற்சாலைக்கு தேவைப்படுகிறது. இந்த அட்டை பெட்டி தயாரிப்பில் மூலப்பொருளாக இருந்து வரும் ‘கிராப்ட்’ எனப்படும் காகிதங்கள், காகித உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. கடந்த பல வாரங்களாக காகித உற்பத்தி நிறுவனங்கள், அட்டை பெட்டி நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் வழங்குவதை அடிக்கடி நிறுத்தி வருவதால் காகிதங்களின் விலை உயர்ந்துள்ளது.

உற்பத்தி நிறுத்தம்

இதன்படி, அட்டை பெட்டி உற்பத்தியின் மூலப்பொருளான காகிதத்தின் விலை டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500–ல் இருந்து தற்போது ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், சிறு, குறு, தொழில் நிறுவனங்களின் பாதிப்பை தடுத்து நிறுத்தக்கோரியும், மூலப்பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று முதல் வருகிற 20–ந்தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்ய அட்டை பெட்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி, திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள அட்டைபெட்டி நிறுவனங்கள் நேற்று இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டன. திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தியிருந்தன. இதனால் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதுடன், ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் நடத்த முடிவு

உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் கே.பி.என்.காலனி அண்ணாநகர் பிரிவு, வி.கே.ஆர். தோட்டம் பகுதியில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், காகித விலையேற்றம் அதிகரித்து வருவதால் அட்டை பெட்டியின் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டும் எங்களால் நஷ்டத்தை ஈடுகட்ட முடியவில்லை.

இதனால் காகித ஆலைகளில் இருந்து மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதும், தொழில் நிறுவனங்களுக்கு அட்டைபெட்டிகள் விற்பனை செய்வதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகிற 20–ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அட்டை பெட்டி உரிமையாளர்கள் சார்பில் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமான அட்டை பெட்டி தயாரிப்பு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story