கொத்தடிமைகளாக 12 பேர் வேலை பார்த்த வழக்கு: செங்கல் சூளை உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை ராமநகர் கோர்ட்டு தீர்ப்பு
செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக 12 பேர் வேலை பார்த்த வழக்கில், அதன் உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநகர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு,
செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக 12 பேர் வேலை பார்த்த வழக்கில், அதன் உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநகர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
. 12 பேர் மீட்புராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் செங்கல் சூளை நடத்தி வருபவர் நஞ்சப்பா. இவரது செங்கல் சூளையில் 12 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தனர். அவர்கள் 12 பேரும் கடந்த 2010–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்களாக வேலை செய்துள்ளனர்.
மேலும் நஞ்சப்பா, அவர்களை வீட்டிற்கு செல்ல அனுமதிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் 2014–ம் ஆண்டு ஆகஸ்டு 13–ந் தேதி தனியார் தொண்டு நிறுவனத்தினர், போலீசாருடன் அந்த செங்கல் சூளையில் சோதனை நடத்தி, 12 தொழிலாளர்களையும் மீட்டார்கள்.
இதுகுறித்து கனகபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கல் சூளை உரிமையாளரான நஞ்சப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதுதொடர்பான வழக்கு ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.
உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறைஅப்போது நஞ்சப்பாவின் செங்கல் சூளையில் 12 தொழிலாளர்களும் கொத்தடிமைகளாக வேலை செய்ததும், அவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கியதும் நிரூபணம் ஆனதால், நஞ்சப்பாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் நஞ்சப்பாவுக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதில், அதன் உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.