குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

சாலையை அகலப்படுத்தும் பணியால் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்து குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்,

கரூர்- ஈரோடு சாலை வடிவேல் நகர் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக வடிவேல் நகர் பகுதியில் சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, சாலை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் வடிவேல் நகர் 1-வது தெரு பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்ய முடியவில்லை. மேலும் சாலை நெடுகிலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் லாரிகளிலும் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் வடிவேல் நகர் 1-வது தெரு பகுதி மக்கள் தண்ணீருக்கு சிரமப்பட்டு வந்தனர்.

எனவே துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்க்கு இணைப்பு கொடுத்து தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி குடிநீர் வினியோகம் செய்ய கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி நேற்று இரவு 7.30 மணி அளவில் கரூர்- ஈரோடு சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்- ஈரோடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story