புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 17 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் முடங்கின. இதனால் பொது மக்கள் பாதிப்படைந்தனர்.

புதுக்கோட்டை,

குறைந்த பட்ச ஊதியம் ரூ.26 ஆயிரமாக வழங்க வேண்டும், 3 மத்திய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதியை அமல்படுத்த வேண்டும், 1-1-2016 முதல் வீட்டு வசதி அலவன்சை வழங்க வேண்டும், 7-வது ஊதிய குழு பரிந்துரைகளில் திருத்தங்களுடன் கோரிக்கையை தீர்த்து வைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து காலிபணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் தபால் துறை, வருமானவரித்துறை உள்பட மத்திய அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 56 தபால் நிலையங்களில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம், ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், கறம்பக்குடி, கோட்டைப்பட்டினம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கீரனூர், நார்த்தாமலை, விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், அரிமளம், திருமயம், பொன்னமராவதி, காரையூர், கந்தர்வகோட்டை, நமணசமுத்திரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களும் நேற்று பூட்டி கிடந்தன.

பொதுமக்கள் பாதிப்பு

இதனால் தபால் நிலையத்தின் அன்றாட பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கின. இதனால் தபால் நிலையங்களுக்கு வந்த பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வருமான வரித்துறையினரும் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. 

Next Story