அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால் 2 பஸ்கள் ஜப்தி


அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால் 2 பஸ்கள் ஜப்தி
x
தினத்தந்தி 17 March 2017 2:38 AM IST (Updated: 17 March 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் உயிரிழந்தவர் களுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.

கரூர்,

கரூரை அடுத்த சேங்கலையை சேர்ந்தவர் மாதவன்(வயது 40). கரூரில் உள்ள ஒரு ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 17.8.2011 அன்று தனது மோட்டார் சைக்கிளில் காந்திகிராமம் அருகே கரூர்- திருச்சி சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாதவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோரி அவருடைய மனைவி பாப்பாத்தி கரூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பாப்பாத்திக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் ரூ.11 லட்சத்து 28 ஆயிரத்து 444-ஐ இழப்பீடாக வழங்க வேண்டும் என்று 2013-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இன்னும் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை.

உத்தரவு

இதேபோன்று கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டான்கோவிலை சேர்ந்தவர் முனியன்(55). விவசாயி. இவர் கடந்த 2008-ம் ஆண்டு கரூர்- கோவை சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முனியன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அவருடைய மனைவி மகேஸ்வரி கரூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து மகேஸ்வரிக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடு தொகையை 4 தவணைகளாக வழங்க வேண்டும் என்று 2011-ம் ஆண்டு கரூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் முதல் தவணையாக வழங்கப்பட்டது. மீதித்தொகை வழங்கவில்லை.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து மகேஸ்வரி, பாப்பாத்தி ஆகிய 2 பேரும் கரூர் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இதில் 2 பேருக்கு இழப்பீடு தொகை வழங்காததற்காக 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய கரூர் மாவட்ட நீதிபதி ஹேமலதா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 அரசு பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கரூர் கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு சென்று அங்கு நிறுத்தினர். 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ததால் நேற்று மதியம் கரூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story