அரியலூர் நகரில் வறண்டு போன ஏரிகளால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


அரியலூர் நகரில் வறண்டு போன ஏரிகளால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 17 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் நகரில் வறண்டு போன ஏரிகளால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அரியலூர்,

அரியலூர் நகரின் நிலத்தடி நீர்மட்டத்திற்கு செட்டிஏரி, குறிஞ்சான்குளம், அய்யப்பனேரி, சித்தேரி, வண்ணாங்குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் ஆதாரமாக விளங்குகின்றன. எனினும் பருவமழை பொய்த்து போனதால் ஏற்பட்ட கடும் வறட்சியால் செட்டி ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.

இதனால் அரியலூர் நகரில் தற்போது பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து விட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் ஆங்காங்கே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

செட்டிஏரி

அரியலூர் நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செட்டிஏரி தற்போது வறண்டு போனதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இறுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக செட்டிஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. அப்போது செட்டி ஏரி ஆழப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தால் சீக்கிரமாக வறண்டு விட்டது. அரியலூர் நகரில் கொள்ளிட கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் செட்டிஏரியின் கரையை பலப்படுத்தி பூங்காவாக மாற்றப்பட்டு நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.

தூர்வார கோரிக்கை

இந்த நிலையில் செட்டிஏரி வரத்துவாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டது. அதன்பிறகு இருகரைகளையும் பலப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது ஏரி முழுவதும் வறண்டு 6 மாத காலமாக ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் இருக்கிறது. எனவே கோடை மழை தண்ணீரை சேமிக்கும் வகையில் ஏரியை தூர்வார இதுவே சரியான தருணம் ஆகும். எனவே ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் நகரில் உள்ள மற்ற ஏரிகளையும் தூர்வாரி ஆழப்படுத்தினால் கொள்ளிட குடிநீர் பற்றாக்குறையாக இருந்தாலும் நிலத்தடி நீர்மட்டம் கைகொடுக்கும். எனவே நகரில் ஏரிகள் உள்ளிட்ட நீராதாரங்களை தூர்வாரி பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story