மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு


மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 17 March 2017 4:30 AM IST (Updated: 17 March 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டன.

புதுச்சேரி,

7–வது ஊதியக்குழுவில் ஊழியர்களுக்கு எதிரான பரிந்துரைகளை மாற்றி அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர் சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்தது. புதுச்சேரியிலும் நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.

இதில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்காரர் மற்றும் பன்முகத்திறன் ஊழியர் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம், அனைத்திந்திய ஊரக அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய ஊரக அஞ்சல் ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊழியர்களின் போராட்டத்தால் தலைமை தபால் நிலையம் மூடப்பட்டிருந்தது. பல்வேறு தபால் நிலையங்களும் செயல்படவில்லை. இதனால் தபால் பட்டுவாடா உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

வருமான வரித்துறை


இதேபோல் குறைந்தபட்ச ஊதிய உயர்வு அளித்தல், வீட்டு வாடகைப்படியை உயர்த்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், காண்டிராக்ட் மற்றும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருமான வரித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

இதில் ஈடுபட்ட ஊழியர்கள் தெய்வநாயகம் பிள்ளை தோட்டத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சங்க செயலாளர் பாலமுருகன், ஊழியர் சங்க செயலாளர் கோவிந்தன், தலைவர் ஹசன் அலி ஜாகிர், பொருளாளர் சுஜிதா பேகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story