சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 March 2017 4:30 AM IST (Updated: 17 March 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது பற்றிய விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து நேற்று காலை தொடங்கியது. பேரணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடியசைத்து தொடங்கி வைத்து கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், பாசன வாய்க்கால்கள், சாலையோரங்கள் மற்றும் தனியார் நிலங்களில் இயற்கையாகவே வளர்ந்து வரும் சீமைக்கருவேல மரங்கள் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், அவற்றை அகற்றிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளையின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அபராத தொகை

அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள பட்டாதாரர்கள் அவர்களுடைய நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்திருந்தால் அவற்றை வேருடன் வெட்டி அப்புறப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஒரு மாதமாக அரசு நிலங்களில் உள்ள 50 சதவீத சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிட சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மரங்களை அகற்றாத பட்சத்தில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமிருந்து இரண்டு மடங்கு அபராத தொகை வசூலிக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்கள் பட்டா நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

கருத்தரங்கு

பேரணியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி செட்டிகுளம் வழியாக நாகர்கோவில் இந்து கல்லூரியை சென்றடைந்தது. பின்னர் அங்கு கருத்தரங்கு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, நாகர்கோவில் கோட்டாட்சியர் ராஜ்குமார், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story