தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு


தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2017 2:48 AM IST (Updated: 17 March 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை என்று கூறி நகராட்சி ஆணையாளரை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம்,

தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் மதிவாணனை நேற்று காலை பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்ரமணியம், கோட்ட பொருளாளர் பாஸ்கர், நகர தலைவர் ஜெயராமன், பாலாஜி, அசோக் ஜெயின், ரமேஷ், ஜோதி உள்பட 30–க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள், தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை கிடங்கை அகற்றுவது, பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது, சாலை பணிகளை சரியாக செய்யாதது, தெரு விளக்குகளை சரி செய்யாதது, பொதுநலக்கூடங்கள் திறக்கப்படாமல் இருப்பது, நகராட்சிக்கு சொந்தமான நிலங்களுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது உள்பட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாமல் இருப்பது குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.

மக்கள் பிரச்சினைகள்

இதனை சற்றும் எதிர்பார்க்காத நகராட்சி ஆணையாளர் மதிவாணன், பா.ஜனதாவினரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார். பின்னர் அனைத்து பிரச்சினைகளையும் 15 நாட்களுக்குள் சரி செய்து தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து பா.ஜனதாவினர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்ரமணியம் கூறும்போது, ‘‘தாம்பரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் பதவி காலம் முடிந்த பிறகு நகராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இதுபற்றி ஆணையாளர் மதிவாணனிடம் கேட்டோம். அவர், மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தி 15 நாட்களில் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்து உள்ளார். சொன்னபடி அவர் செய்யவில்லை என்றால் நகராட்சி முற்றுகை போராட்டம் நடைபெறும்’’ என்றார்.

இந்த சம்பவத்தால் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story