புதையலில் கிடைத்ததாக கூறி போலி தங்க கட்டிகளை விற்க முயன்ற கணவன்–மனைவி கைது


புதையலில் கிடைத்ததாக கூறி போலி தங்க கட்டிகளை விற்க முயன்ற கணவன்–மனைவி கைது
x
தினத்தந்தி 17 March 2017 2:53 AM IST (Updated: 17 March 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

புதையலில் கிடைத்ததாக கூறி போலி தங்க கட்டிகளை விற்க முயன்ற கணவன்–மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

மதுரவாயல் கந்தசாமி நகர், 7–வது தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). இவர், மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த ஒரு தம்பதியினர், ‘‘நாங்கள் கட்டிட வேலை பார்த்து வருகிறோம். புதிதாக வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது எங்களுக்கு தங்க புதையல் கிடைத்தது. ரூ.4 லட்சம் கொடுத்தால் அதை உங்களுக்கு தருகிறோம். முதலில் ரூ.1 லட்சம் தந்தால் போதும், மீதி பணத்தை பிறகு வாங்கிக்கொள்கிறோம்’’ என்றனர்.

மேலும் புதையலில் கிடைத்ததாக கூறி தங்களிடம் இருந்த தங்க கட்டிகளையும் அவரிடம் காண்பித்தனர். ஏழுமலை அதை வாங்கி பரிசோதனை செய்தபோது அது பித்தளை கட்டிகள் என்பது தெரியவந்தது. இதுபற்றி அவர், மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

கணவன்–மனைவி கைது

அதன்பேரில் மதுரவாயல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமசாமி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தம்பதியினரை பிடித்து விசாரித்தார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்.

அதில் அவர்கள், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த பாப்பாராவ் (36) மற்றும் அவருடைய மனைவி வரலட்சுமி (30) என்பது தெரியவந்தது. கணவன்–மனைவி இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் அரை கிலோ தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

போதிய வருமானம் கிடைக்காததால்...

மேலும் விசாரணையில் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, கட்டிட வேலை பார்த்து வந்தனர். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் இதுபோல் பித்தளை கட்டியில் தங்க முலாம் பூசி புதையலில் கிடைத்ததாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரையும் ஏற்கனவே சாத்தாங்காடு போலீசார், போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்ற முயன்றதாக கைது செய்து சிறையில் அடைத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கைதான பாப்பாராவ், வரலட்சுமி இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story