மும்பையில் ரூ.2 கோடி பழைய நோட்டுகளுடன் 4 பேர் கைது காரில் கொண்டு வந்தபோது சிக்கினர்


மும்பையில்  ரூ.2 கோடி பழைய நோட்டுகளுடன் 4 பேர் கைது காரில் கொண்டு வந்தபோது சிக்கினர்
x
தினத்தந்தி 17 March 2017 4:00 AM IST (Updated: 17 March 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பாந்திராவில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை பாந்திராவில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரில் பழைய ரூபாய் நோட்டுகள்

மும்பை பாந்திரா கிழக்கு, அரசு குடியிருப்பு கட்டிடம் அருகில் நேற்று முன்தினம் இரவு சிலர் தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் மாற்ற வர உள்ளதாக கேர்வாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் இரவு 9 மணியளவில் அங்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர்.அப்போது சொகுசு கார் ஒன்றில் அங்கு வந்த 4 பேர் யாரையோ எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று 4 பேரையும் கீழே இறங்க செய்து, காரில் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது கார் டிக்கியில் பெரிய பெட்டி ஒன்று இருந்தது. அந்த பெட்டியை போலீசார் திறந்து பார்த்தனர். அந்த பெட்டிக்குள் கட்டுக்கட்டாக பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு போலீசார் திகைப்படைந்தனர்.

4 பேர் கைது

இதையடுத்து போலீசார் காருடன் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் காரில் வந்த 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பாந்திரா கிழக்கு பகுதியை சேர்ந்த வினோத் தேசாய்(வயது43), வெர்சோவாவை சேர்ந்த இம்தாஜ் முலாணி(25), காந்திவிலியை சேர்ந்த சச்சின் சுமாரியா(30), சுரேஷ் கும்பார்(36) ஆகியோர் என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்த ரூபாய் நோட்டுகளை எண்ணி பார்த்தபோது மொத்தம் ரூ.2 கோடியே 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணத்தை வெர்சோவாவை சேர்ந்த ராஜேஷ் தகானூக்கர் என்பவர் மாற்றி தருவதாக கூறியதின் பேரில் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் ராஜேஷ் தகானூக்கரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story