போலி பாஸ்போர்ட், விசா மூலம் லண்டன் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 4 பேர் கைது
போலி பாஸ்போர்ட், விசா மூலம் லண்டன் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 4 பேரும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த 4 இங்கிலாந்து பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
போலி பாஸ்போர்ட், விசா மூலம் லண்டன் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 4 பேரும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த 4 இங்கிலாந்து பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையை சேர்ந்தவர்கள்மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சம்பவத்தன்று லண்டனுக்கு விமானம் ஒன்று செல்ல இருந்தது. இந்த விமானத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 4 பேர் செல்ல இருந்தனர். ஆனால் 4 பேரும் இங்கிலாந்து நாட்டினர் போல தோற்றமளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடியுரிமை அதிகாரிகள் 4 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரித்தனர்.
இதில் அவர்கள் இலங்கையை சேர்ந்த அருணா, கண்ணதாசன், சந்திரபாலன், கார்கசாமி என்பதும், அவர்கள் போலி பாஸ்போர்ட், விசாவில் லண்டன் செல்ல இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:–
போலி விசா, பாஸ்போர்ட்இலங்கையை சேர்ந்த இவர்கள் 4 பேரும் ஆமதாபாத் விமானத்திற்கு டிக்கெட் வாங்கி விமான நிலையத்திற்குள் வந்துள்ளனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்ய இங்கிலாந்தை சேர்ந்த குவிலியன், டோம்னிக், வைப்காட்ஸ், வார்னர் ஆகிய 4 பேரும் விமான நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் லண்டன் செல்லும் விமானத்திற்கான போர்டிங் பாசை வாங்கினர். பின்னர் அதை இலங்கையை சேர்ந்த 4 பேரிடமும் கொடுத்துள்ளனர். இதையடுத்து இலங்கையை சேர்ந்தவர்கள் இங்கிலாந்தை சேர்ந்தவர்களின் பெயரில் தங்களிடம் உள்ள போலி பாஸ்போர்ட், விசாவை பயன்படுத்தி அந்த விமானத்தில் லண்டன் செல்ல முயன்றபோது குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கியது தெரியவந்தது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் விமான நிலைய வளாகத்திற்குள் நின்று கொண்டு இருந்த இங்கிலாந்தை சேர்ந்த 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் 8 பேரும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களுக்கு எப்படி போலி பாஸ்போர்ட், விசா கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.