சுற்று வட்டாரத்தில் பட்டாசு ஆலைகள் இருப்பதால் வெம்பக்கோட்டையில் தீயணைப்பு நிலையம் திறக்க வலியுறுத்தல்


சுற்று வட்டாரத்தில் பட்டாசு ஆலைகள் இருப்பதால் வெம்பக்கோட்டையில் தீயணைப்பு நிலையம் திறக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 March 2017 4:30 AM IST (Updated: 17 March 2017 6:37 PM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இருப்பதால் அங்கு தீயணைப்பு நிலையம் திறக்க வேண்டும்

தாயில்பட்டி,

தாலுகா

சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை தாலுகா தலைநகராக இருந்தாலும் இங்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையே உள்ளது. புதிய தாலுகாவாக உதயமானாலும் அதற்கான கட்டிடம் கட்டப்படாமல் வேளாண்மைதுறை கட்டிடத்தில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சார்பதிவாளர் அலுவலகமும் கொண்டுவரப்படவில்லை. இதற்காக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவகாசிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

துணை சுகாதாரநிலையத்தை 30 படுக்கை வசதியுடன் அரசு மருத்துவமனையாக்கிட இடம் தேர்வு செய்யப்பட்டும் இதற்கான பணி தொடங்கப்படவில்லை. இதனால் வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் சிரமப்படுகின்றனர். இந்தப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ள நிலையில் சிறு விபத்து என்றாலும் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாத்தூர் அல்லது சிவகாசியில் இருந்துதான் தீயணைப்பு வண்டிகள் வரவேண்டியுள்ளது. இதனால் தீயணைப்பு நிலையம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பஸ் வசதி

இந்த பகுதியை சேர்ந்த பலர் ராணுவம், கப்பல் துறை, காவல் துறையில் பணியாற்றி வருகின்றனர். இதைப்போன்ற பணிகளுக்காக ஆர்வமுடன் இருக்கும் இளைஞர்களுக்காக உடற்பயிற்சி மையம் அமைத்து இதில் பணி ஓய்வு பெற்றவர்கள் மூலம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையும் பரிசீலிக்கப்படாமல் உள்ளது.

மேலும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அமைத்து கூடுதல் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டியதும் அவசியமாகும். சென்னைக்கு வெம்பக்கோட்டை வழியாக பஸ் விட வேண்டும் என்றும் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைப்பாறு

அரசு மேல் நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதனால் சுற்றுச்சுவர் கட்டி பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பெண்களுக்கான சுகாதார வளாகம் இருந்தாலும் அதனை பராமரிக்காததால் பெண்கள் அவதிப்படுகின்றனர்.

கழிவு நீர் வைப்பாற்றில் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சீரான குடிநீர் வினியோகத்துக்காக வைப்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. வைப்பாற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டினை தடுக்க முன்பு இருந்ததுபோல் 2 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அச்சங்கோவில் பம்பை ஆற்றினை வைப்பாற்றுடன் இணைத்து பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. வெம்பக்கோட்டை நீர்த்தேக்கத்தில் இருந்து கண்மாய்க்கு செல்லும் வரத்து ஓடையை தூர்வாரி மழை நீர் தடையில்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் அடிப்படை

தேவைகளை நிறைவேற்றிடவும் தாலுகா தலைநகரான வெம்பக்கோட்டையை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.


Next Story