தர்மபுரியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டம் பெண்கள் உள்பட 200 பேர் கைது
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி
தர்மபுரி
சாலை மறியல்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் நிலையில் உள்ள அலுவலர்கள் என 750 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஊரக வளர்ச்சித்துறையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலமுறை ஊதியம்இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைசெயலாளர் லோகநாதன் வரவேற்றார். சங்க மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட நிர்வாகிகள் வடிவேலன், மணிவண்ணன், ருத்தரையன், இளங்குமரன், முன்னாள் மாவட்ட தலைவர் ராமஜெயம், அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கணினி உதவியாளர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பவை உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
200 பேர் கைது
போராட்டக்குழுவினர் தர்மபுரி–சேலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த 50 பெண்கள் உள்பட 200 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஆயுதப்படை திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.