மகேந்திரமங்கலம் அருகே 10–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை


மகேந்திரமங்கலம் அருகே 10–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 March 2017 4:00 AM IST (Updated: 17 March 2017 6:53 PM IST)
t-max-icont-min-icon

மகேந்திரமங்கலம் அருகே 10–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

பாலக்கோடு,

10–ம் வகுப்பு மாணவன்

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் பந்தாரஅள்ளி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அமுதவள்ளி. இவர்களுக்கு ஒரு குருபிரசாத் (வயது15) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். அமுதவள்ளி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் விவேகானந்தன் லட்சுமி என்ற பெண்ணை 2–வது திருமணம் செய்து கொண்டார். இவர் வீராசானூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

மாணவன் குருபிரசாத் பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாணவன் வீட்டில் படித்து விட்டு அறையில் தூங்க சென்றான். அதிகாலை மகனை படிக்க எழுப்புவதற்காக விவேகானந்தன் அறைக்கதவை திறந்து உள்ளார். அப்போது மாணவன் குருபிரசாத் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பரிதாப சாவு

உடனே மகனை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாலக்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு விவேகானந்தன் கொண்டு சென்றார். அப்போது மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story