சேத்தியாத்தோப்பு அருகே பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கி 6 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சேத்தியாத்தோப்பு அருகே பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கி 6 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 7:41 PM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கி 6 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு,

உருட்டு கட்டையால் தாக்குதல்

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் விவசாயி. இவருடைய மனைவி சரோஜா. நேற்று முன்தினம் இரவு காசிதாதன், சரோஜாவுடன் அதே ஊரில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிட்டு இருந்த நெல்லுக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். பின்னர் சரோஜா தனது கணவர் காசிநாதனுக்கு உணவு எடுத்து வருவதற்காக வீட்டிற்கு தனியாக புறப்பட்டு சென்றார்.

வயலில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் சரோஜாவை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சரோஜா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அப்போது அந்த மர்மநபர்கள் சரோஜாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர்.

நகை பறிப்பு

இதனிடைய மயங்கி கிடந்த சரோஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீமுஷ்ணம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சரோஜாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரோஜாவின் கணவர் காசிநாதன் உள்பட பலரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரோஜாவையும் சந்தித்து விசாரணை நடத்தினர்.

மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பறிபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரோஜாவை தாக்கி நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story