ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
தமிழ்நாடு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்கள் கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை. இதை கண்டித்து ஓய்வு பெற்றோர் நலச்சங்க கூட்டமைப்பினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கும்பகோணத்தில் நேற்றுமுன்தினம் மண்சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2–வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் உடனடியாக ஓய்வூதியத்தை வழங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தின்போது ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஒப்பாரி வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர். கும்பகோணம் போக்குவரத்துக்கழக அலுவலக வாசலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஒப்பாரி போராட்டத்தை தொடர்ந்து அலுவலக வாசலில் துணியை விரித்து கையில் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கழக அலுவலக வாசலில் பல மணி நேரம் நடந்த இந்த போராட்டம் காரணமாக கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பார்வை இழந்த முதியவர்ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தில் கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள்கோவில் சோழன்நகரை சேர்ந்த பிரசன்னகுமார் (வயது63) என்பவரும் கலந்து கொண்டார். அரசு போக்குவரத்துக்கழகத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த அவர் கடந்த 2012–ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக பார்வையை இழந்த அவர் தொடர்ந்து 2–வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.