அரசு புறம் போக்கு நிலத்திற்கு பட்டா கேட்டு உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்
பேரையூர் அருகே அரசு புறம் போக்கு நிலத்திற்கு பட்டா கேட்டு, உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்
உசிலம்பட்டி,
பேரையூர் தாலுகாவில் உள்ளது கொண்டுரெட்டிபட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் ஒச்சாத்தேவர் (வயது 62). இவர் பல வருடங்களாக தனது வீட்டில் அருகே உள்ள அரசு புறம் போக்கு நிலத்திற்கு வரி கட்டி அனுபவித்து வருகிறார். இந்தநிலையில் அந்த இடத்திற்கு அருகில் உள்ள கிருஷ்ணக்கோனார் என்பவரும் புறம் போக்கு நிலத்தை சொந்தம் கொண்டாடி வந்தார்.
அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் 2 பேரும் சேடபட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், பிரச்சினைக்குரிய இடத்தில் 2 பேரும் எந்த வேலையும் செய்யக்கூடாது என்றும், வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளபடி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலரை அவர்கள் அணுகிய போது, அவர் அரசு புறம் போக்கு நிலம் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஒச்சாத்தேவர் தங்களாச்சேரி ஊராட்சிமன்றத் தலைவர் வாசுவிடம் பட்டா கேட்டாராம். அதற்கு அவர் தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்தாராம்.
தற்கொலை மிரட்டல்அதைத்தொடர்ந்து ஒச்சாத்தேவர் நேற்று காலை 10 மணிக்கு தங்களாச்சேரி செல்லும் சாலை அருகில் தனது நிலத்தின் வழியாக செல்லும் உயர் மின் அழுத்த கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து சென்ற பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்–இன்ஸ்பெக்டர் போதுமணி, துணை தாசில்தார் முனியசாமி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவள்ளி ஆகியோர் மின்சார கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருமாறு கூறினர்.
ஆனால் தன்னை மிரட்டிய வாசுவை கைது செய்ய வேண்டும், பல தலைமுறையாக சம்பந்தப்பட்ட இடத்தை உபயோகித்து வருவதாகவும், அந்த இடத்திற்கு பட்டா தராமல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்கின்றனர். எனக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இறங்க மாட்டேன் என்று கூறினர். பின்னர் அதிகாரிகள் ஒச்சாத்தேவரின் மகனை வரவழைத்து சமரசப்படுத்தி கீழே இறங்க செய்தனர்.
பின்னர் போலீசார், உங்கள் பிரச்சினைக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். அதைவிடுத்து இதுபோன்ற தவறான முடிவை எடுக்க கூடாது என்று ஒச்சாத்தேவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். சுமார் 2½ மணி நேரம் நீடித்த தற்கொலை மிரட்டல் போராட்டம் மதியம் 12–30 மணிக்கு முடிவடைந்தது.