சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 18 March 2017 2:45 AM IST (Updated: 17 March 2017 8:08 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

வேலூர்,

வேலூரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட நீதிபதி ஆனந்தி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ்நாட்டில் ஏரி மற்றும் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏரிகளிலும், தனியார் பட்டா நிலங்களிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இவற்றை அந்தந்த மாவட்ட நீதிபதிகள் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்து வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்திலும் சீமைக்கருவேல் மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சீமைக்கருவேலை மரங்களை அகற்றுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வக்கீல்கள் சார்பில் வேலூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

நீதிபதி தொடங்கி வைத்தார்

சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட நீதிபதி ஆனந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி நடராஜன், சார்பு நீதிபதி தாமோதரன், மாஜிஸ்திரேட்டு தட்சிணாமூர்த்தி, வக்கீல்கள் சங்க தலைவர் சேரலாதன், வக்கீல்கள் பாஸ்கரன், ஜெயஸ்ரீ மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தை அடைந்ததும் அங்கு ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றுவதற்கான எந்திரத்தை மாவட்ட நீதிபதி ஆனந்தி, கலெக்டர் எஸ்.ஏ.ராமனிடம் வழங்கினார்.

வக்கீல்கள் அகற்றுவார்கள்

முன்னதாக மாவட்ட நீதிபதி ஆனந்தி கூறியதாவது:–

சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் ஏக்கரில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. அதில் இதுவரை 15 சதவீதம் மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மரங்களும் அகற்றப்படும்.

ராணிப்பேட்டை பகுதியில் பிஞ்சி ஏரியில் 25 ஏக்கரில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வக்கீல்கள் அகற்றி வருகிறார்கள். அதேபோன்று வேலூரை அடுத்த சதுப்பேரி ஏரியில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேலூர் வக்கீல்கள் வருகிற 25–ந் தேதி முதல் அகற்றுவார்கள்.

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு நிதி திரட்டுவதற்காக கலெக்டர் ஒரு வங்கிக்கணக்கை தொடங்கியிருக்கிறார். அதில் பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story