வீட்டு வசதிவாரிய குடியிருப்புகளில் வணிக கட்டிடங்கள் அமைப்பதை எதிர்த்து வழக்கு உரிய எதிர்மனுதாரரை சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை அண்ணாநகரை சேர்ந்த துரைராஜ்(வயது 74).
மதுரை,
மதுரை அண்ணாநகரை சேர்ந்த துரைராஜ்(வயது 74). மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
வாகன நிறுத்தம், சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளுடன் குடியிருப்பு பகுதிகளை உருவாக்கும் விதமாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், குடிசைவாரியமும் ஏற்படுத்தப்பட்டது. இதன்கீழ் வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டன. மதுரையில் அண்ணாநகர், கே.கே.நகர், எல்லீஸ்நகர், கூடல்நகர், அனுப்பானடி பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இந்த குடியிருப்புகளுக்கு சொந்தக்காரர்கள் சில வருடங்கள் கழித்து அந்த வீட்டுமனைகளை மற்றவர்களுக்கு விற்றுவிட்டனர். அதை வாங்கியவர்கள் திட்டவரைபட அனுமதியை மீறி, வணிகப்பயன்பாட்டுக்கு வரும் வகையில் கடைகள், ஓட்டல்கள் போன்றவற்றை அமைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மற்றவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கழிவுநீர், சமையல் புகை போன்றவை வெளியேற வழியில்லாமல் உள்ளது. எனவே திட்டவரைபட அனுமதியை மீறி வணிக நோக்கில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உரிய எதிர்மனுதாரரை சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜூன்மாதம் 8–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.