ஓமலூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் ஆசிரியர் உள்பட 5 பேர் மீது வழக்கு
ஓமலூரை அடுத்த சர்க்கரை செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 38).
ஓமலூர்,
ஓமலூரை அடுத்த சர்க்கரை செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 38). இவர் தொளசம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், ஓமலூர் கள்ளிகாடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகள் நதியாவுக்கும்(34) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ரித்திக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு நதியா அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. முத்துகிருஷ்ணனுக்கு ஆதரவாக அவரது தந்தை சுந்தரமூர்த்தி(60),தாய் சுந்தரம்மாள்(55),அக்காள்கள் இந்திரராணி(40),வசந்தா(42) ஆகியோர் நதியாவிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் நதியா கணவருடன் கோபித்துகொண்டு தற்போது தனது தந்தை வசித்து வரும் கோவை கவுண்டம்பாளையத்திற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நதியாவிடம் விவாகரத்து கேட்டு முத்துகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நதியா, ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். இதனை அடுத்து போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்து வைத்தனர். பின்னர் முத்துகிருஷ்ணன் தனது மனைவியுடன் சமாதானம் செய்து கொண்டு ஓமலூரில் தனியாக வாடகை வீட்டில் மனைவியுடன் வாழ்வதாக கூறி அழைத்து சென்றார். இந்நிலையில் மீண்டும் முத்துகிருஷ்ணன் தனது மனைவியிடம் ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது குடும்பத்தினரும் நதியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக நதியா, ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் அவரது தந்தை சுந்தரமூர்த்தி, தாய் சுந்தரம்மாள், அக்காள்கள் இந்திரராணி, வசந்தா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.