நாகையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் 9 பெண்கள் மயங்கி விழுந்தனர் நீர் தேக்க தொட்டியில் ஏறி மீனவர்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு கலெக்டரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ்
இலங்கை அரசை கண்டித்து நாகையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் மயங்கி விழுந்தனர்.
நாகப்பட்டினம்,
கடந்த 6–ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர் பிரிட்ஜோ (வயது21) உயிரிழந்தார். இதைதொடர்ந்து இலங்கை அரசை கண்டித்து நாகை மாவட்ட மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 14–ந்தேதி அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், கலெக்டர் பழனிசாமி உள்ளிட்டோர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து 15–ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மீனவர்கள் அறிவித்தனர். ஆனால் இலங்கையில் உள்ள படகுகளை மீட்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று 5–வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் நாகை, காரைக்கால் மீனவர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் மயக்கம்உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்கள், சாலைக்கு வந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த சரோஜா, வெண்மதி, கோவிந்தம்மாள், ஜெயலட்சுமி, முத்துலட்சுமி நம்பியார்நகர் பகுதியை சேர்ந்த மலர்கொடி, அன்னலட்சுமி, கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த தையல்நாயகி உள்பட 9 பெண்கள் மயங்கி விழுந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் மயங்கி விழுந்த பெண்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் நாகை அக்கரைபேட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (48) என்பவர் ரெயில் நிலையம் அருகில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியின் மீது ஏறி தற்கொலை செய்ய முயன்றார். அவரை காப்பாற்றுவதற்காக அக்கரைபேட்டை வடக்குதெரு பகுதியை சேர்ந்த மற்றொரு மீனவர் செல்வநாதன் (32) என்பவர் குடிநீர் தொட்டியின் மீது ஏறினார்.
தற்கொலை செய்ய முயற்சிஅப்போது செல்வநாதன் திடீரென தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறி தனது சட்டையை கழற்றி வீசிவிட்டு கீழே குதிக்க முயன்றார். உடனே உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் மீனவர்கள் அவர்களை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அவர்கள் கீழே இறங்கி வர மறுத்து விட்டனர். இதனால் மீனவர்கள் சிலர் குடிநீர்தேக்க தொட்டியின் மீது ஏறி மூர்த்தி மற்றும் செல்வநாதனை வலுக்கட்டாயமாக மீட்க முயன்ற போது அவர்கள் 2 பேரும் மயக்கம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மயக்கம் அடைந்த மூர்த்தி, செல்வநாதன் ஆகிய 2 பேரையும் கயிறு கட்டி கிழே இறக்கினர். பின்னர் சிகிச்சைக்காக அவர்களை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாபஸ்இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அப்போது நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, உதவி கலெக்டர் கண்ணன், தாசில்தார் தமிம்முல் அன்சாரி ஆகியோர் உடன் இருந்தனர்.