ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பூஜை குலதெய்வம் கோவிலிலும் வழிபாடு நடத்தினார்
ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தோடு வந்து ஆண்டாள்கோவிலில் சிறப்பு பூஜை நடத்தியதோடு குலதெய்வத்தினையும் வழிபட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
முன்னாள் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டுத்தெருவில் பிறந்தவர். இவரது குலதெய்வம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பில் உள்ள பேச்சியம்மன் கோவில் ஆகும். ஓ.பன்னீர் செல்வம் எந்த ஒரு காரியத்துக்கு செல்லும் முன்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும் குலதெய்வத்தையும் வழிபடுவார். மேலும் குலதெய்வம் கோவிலுக்கு வருடத்துக்கு 6 முறைவந்து சிறப்பு பூஜை நடத்துவார்.
இதன்படி நேற்று காலை அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்தார். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தாரும் அவருடன் வந்திருந்தனர். காலை 6.30 மணி அளவில் கோவிலுக்கு வந்த அவரை முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் ஆணழகன், வக்கீல் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் மகேஸ்வரன் மற்றும் பலர் வரவேற்றனர். கோவில் நிர்வாகம் சார்பாகவும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கோ–கஜபூஜைகோவிலுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் ஆண்டாளை வழிபட்டார். மேலும் கோ பூஜை, கஜபூஜை மற்றும் குதிரையை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோவிலை வலம் வந்து அவர் சாமி கும்பிட்டார். அங்கு அமர்ந்தும் வழிபாடு நடத்தினார்.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் என அழைக்கப்படும் வடபத்ரசயனர் கோவிலுக்கு சென்று அங்கும் சிறப்பு பூஜை நடத்தி சாமி தரிசனம் செய்தார். சக்கரத்தாழ்வார் சன்னதியில் சுதர்சன் பூஜையும் நடத்தினார்.
குலதெய்வம்பின்னர் செண்பகத்தோப்பில் உள்ள குல தெய்வமான பேச்சியம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அங்கு அம்மனுக்கு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டார். சிறப்பு அபிஷேகமும் நடந்தது.
நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அவர் பிற்பகல் வரை சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து புறப்பட்ட போது அவரை நிருபர்கள் சூழ்ந்தனர். தமிழக பட்ஜெட் மற்றும் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து கருத்து கேட்டபோது, சாமிதரிசனம் செய்ய வந்திருப்பதாகவும் தற்போது ஏதும் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.