தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல்; 144 பேர் கைது
தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 144 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 144 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், அரசு ஊழியர் சங்கம் முன்பு பாளையங்கோட்டை ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் தமிழரசன், தமிழ்நாடு வணிக வரி பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் முருகன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினர்.
கைதுஇதை தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அங்கிருந்து, பாளையங்கோட்டை மெயின் ரோட்டுக்கு வந்தனர். அங்கு ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், வனசுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 144 பேரை கைது செய்தனர்.
கோவில்பட்டிஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தையொட்டி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்துக்கு நேற்று 32 ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.