அம்பாசமுத்திரம் அருகே அட்டகாசம் செய்த 30–க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிபட்டன
அம்பாசமுத்திரம் அருகே சாட்டுப்பத்து, ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்து வந்தன.
அம்பை,
அம்பாசமுத்திரம் அருகே சாட்டுப்பத்து, ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்து வந்தன. தோட்டங்களில் வாழை மரங்களை நாசப்படுத்தியும், கொய்யா மரங்களில் பழங்களை பறித்து தின்றும் அட்டகாசம் செய்தன. மேலும் அங்குள்ள வீடுகளிலும் புகுந்து உணவு பொருட்களை தூக்கிச் சென்றன.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து அம்பை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஜெயராஜ் உத்தரவுப்படி, வனவர் வெள்ளத்துரை தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சாட்டுப்பத்து பகுதிக்கு சென்றனர். அங்கு தாமிரபரணி கரையோரம் உள்ள ஒரு தோட்டத்தில் கூண்டு வைத்தனர். அதன்படி அந்த கூண்டில் 30–க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிபட்டன. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். பிடிபட்ட குரங்குகள் அனைத்தையும், முண்டந்துறை பீட் பகுதியான கவுதலை ஆற்றுப்பகுதியில் விட்டனர்.