சீர்காழி பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றிய இடங்களில் அதிகாரி ஆய்வு


சீர்காழி பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றிய இடங்களில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 18 March 2017 4:30 AM IST (Updated: 18 March 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றிய இடங்களில் அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சீர்காழி,

ஆய்வு

மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுப்படி பல்வேறு மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் பழனிசாமியின் பரிந்துரையின் பேரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. சீர்காழி அருகே சட்டநாதபுரம், சூரக்காடு, திட்டை, தில்லைவிடங்கன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. மேலும், தனியார் இடத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என்று நிலத்தின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் சீர்காழி அருகே திட்டை, தில்லைவிடங்கன், சூரக்காடு, சட்டநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் நாகை மாவட்ட சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதலுக்கான ஆணையர் ஜம்புலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், தனியார் இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி சீர்காழி ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் கணேசனிடம் கேட்டு கொண்டார். மேலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்த விழிப்புணர்வு பலகைகளை மக்கள் கூடும் இடங்களில் வைக்கும்படி அறிவுறுத்தினார். ஆய்வின்போது, உதவி பொறியாளர் கனகராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

சட்டப்படி நடவடிக்கை

இதேபோல் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி அம்மன் நகர், எம்.ஆர்.ஆர்.ராதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் அப்புறப்படுத்தாமல் உள்ள சீமைக்கருவேல மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தனியார் இடத்தில் தற்போதுவரை சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தாத நில உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி ஆணையர் அஜித்தா பர்வீனிடம் கேட்டு கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், தொழில்நுட்ப உதவியாளர் மருது ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story