மேய்ச்சல் நிலமாக மாறியது– நீர் கொள்ளளவு குறைந்து விட்டது 1,000 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் 6 அடிக்கு மண் மேடான மானூர் குளம்
1,000 ஆண்டுகளாக தூர்வாரப்படாத மானூர் பெரிய குளத்தில் 6 அடி உயரத்துக்கு மண் மேடாகி விட்டதால் நீர் கொள்ளளவு குறைந்து விட்டது.
மானூர்,
1,000 ஆண்டுகளாக தூர்வாரப்படாத மானூர் பெரிய குளத்தில் 6 அடி உயரத்துக்கு மண் மேடாகி விட்டதால் நீர் கொள்ளளவு குறைந்து விட்டது. எனவே குளத்தை தூர்வாரி கூடுதல் தண்ணீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏரி–குளங்கள்தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்து விட்டதால் வரலாறு காணாத அளவுக்கு கடும் வறட்சி நிலவி வருகிறது. நீரின்றி அமையாது உலகு என்பதை மக்கள் உணர்ந்து, மழை நீரை சேமிக்கும் நடவடிக்கைகளில் அரசும், மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்துள்ளோம்.
தமிழ்நாட்டில் ஏரிகளும், குளங்களும் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் அவை தூர்ந்து போய் தண்ணீரின் கொள்ளளவு குறைந்து வருகிறது. இதனால் மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாமல் கடலுக்கு வீணாக செல்கிறது. இதனால் விரைவில் ஏரி, குளங்களின் தண்ணீர் காலியாகி விடுகிறது. அதை தொடர்ந்து கோடை காலத்தில் முழுமையாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நிலை நெல்லை மாவட்டத்திலும் முழுமையாக நீடித்து வருகிறது.
மானூர் பெரியகுளம்நெல்லை மாவட்டத்தில் கால்வாய் வரத்து குளங்கள் 1,221. மானாவாரி குளங்கள் 1,297 என மொத்தம் 2 ஆயிரத்து 518 குளங்கள் உள்ளன. இதில் மாவட்டத்தில் வடக்கு விஜயநாராயணம் குளத்துக்கு அடுத்தபடியாக 2–வது பெரிய குளம், மானூர் பெரிய குளம் ஆகும். இந்த குளம் நீண்ட நெடிய வரலாற்றுக்கு சொந்தமானதாகும்.
மேலும் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள அடவிநயினார் அணை, குண்டாறு அணை, ராமநதி அணை, கருப்பாநதி அணை என 4 அணைகளுக்கான நீர் கொள்ளளவை விட அதிகமாக, அதாவது 190 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது மானூர் பெரிய குளம். இந்த குளம் நிரம்பி விட்டால், பொது மக்கள் அதிகளவு வந்து செல்லும் ஒரு சுற்றுலா ஸ்தலமாகவே மாறி விடுகிறது. இதன் மறுகால் தண்ணீர் பாயும் இடத்தில் குளித்து மகிழ்வதற்கு மானூர் சுற்று வட்டார பகுதி மக்கள் இங்கு வந்து செல்வார்களாம்.
1,120 ஏக்கர்சிற்றாறு பாசனத்தில் உள்ள மிகப்பெரிய குளம் இதுதான். மானூர் பெரிய குளத்தின் உள் பரப்பளவு மட்டும் 1,120 ஏக்கர் ஆகும். இதன் கொள்ளளவு 190 மில்லியன் கன அடி ஆகும். இந்த குளத்தின் மூலம் மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய 4 பஞ்சாயத்துகளை சேர்ந்த கிராமங்கள் நேரடி பாசன வசதி பெற்று நஞ்சை, புஞ்சை என மொத்தம் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
சிற்றாற்றில் மொத்தம் 17 தடுப்பணைகள் உள்ளன. இதில் வீரகேரளம்புதூர் அருகே உள்ள தாயார் தோப்பில் சிற்றாற்றின் குறுக்கே உள்ள 9–வது தடுப்பணையான மானூர் தடுப்பணையில் இருந்து 33 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர் வரத்து கால்வாய் மூலம் மானூர் குளத்துக்கு நீர் வரத்து பெறுகிறது. இந்த கால்வாய் மூலம் 19 குளங்களில் தண்ணீர் நிரமபிய பிறகே 20–வது குளமாக, கடைசி குளமாக மானூர் குளத்துக்கு தண்ணீர் வரவேண்டும். இதை ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் வெட்டி உள்ளனர்.
அணைகளும் காரணம்சிற்றாற்றின் கிளை நதிகளான அனுமன் நதி, கருப்பாநதி மற்றும் குண்டாறு ஆகியவற்றின் நீர் வரத்துதான் மானூர் கால்வாயின் நீர் ஆதாரம் ஆகும். இந்த கிளை நதிகளில் அடவிநயினார் அணை, கருப்பாநதி அணை மற்றும் குண்டாறு அணை என 3 அணைகள் கட்டப்பட்டு உள்ளன.
இதன் பிறகு மானூர் கால்வாயின் நீர் வரத்து முற்றிலும் முடங்கிப்போய் விட்டது. மழை வளம் குறைந்ததும், கால்வாய் மூலம் நர்வரத்து பெறும் 19 குளங்கள் நிரம்பிய பிறகே 20–வது குளமான மானூர் குளத்துக்கு தண்ணீர் வரும் முன்பாகவே மழைக்காலமும் முடிந்து போய் விடுவதாலும் இந்த குளம் நிரம்ப முடியாமல் போகிறது. எனவே மானூர் குளத்தை நம்பி வாழும் மானூர் வட்டார மக்கள் தொடர்ந்து வறட்சியையே சந்தித்து வருகின்றனர். மானூர் பெரியகுளம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவே மாறி விட்டது.
தாமிரபரணி தண்ணீருக்கு உரிமைதாமிரபரணி பாசன பகுதிக்கு மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு என அணைக்கட்டுகள் உள்ளன. ஆனால் சிற்றாறு பாசன பகுதிக்கு என்று எந்த ஒரு பெரிய அணையும் கிடையாது.
மானூர் பெரிய குளத்துக்கு மன்னர் காலத்தில் திருப்புடை மருதூருக்கும், முக்கூடலுக்கும் இடையே மண் அணை கட்டி தண்ணீர் கொண்டு வந்துள்ளனர். ஆனால் நாளடைவில் மண் அணை உடைந்து காணாமல் போய் விட்டது. அத்தோடு மானூர் அணைக்கு தாமிரபரணி தண்ணீர் வரத்தும் நின்று போய் விட்டது. எனவே தாமிரபரணி தண்ணீர் மானூர் பெரிய குளத்துக்கு கிடைக்க வேண்டியது உரிமை ஆகும். ஆனால் அது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது மானூர் பெரிய குளத்தின் உயரத்தை விட தாமிரபரணி ஆறு மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் தாமிரபரணியில் இருந்து மானூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் அனுப்புவது சாத்தியம் கிடையாது என்று கூறிவிட்டனர்.
அதே நேரத்தில் இதற்கு ஒரு வழியையும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதாவது மானூர் பெரிய குளத்துக்கு சிற்றாறு தண்ணீர் கடைசியாகவே வந்து கிடைப்பதால், கடனாநதி உபரி தண்ணீரை கால்வாய் மூலம் மானூர் பெரிய குளத்துக்கு திருப்பி விட சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து ஆய்வு நடத்திய அதிகாரிகள், போதிய நிதி இல்லை என்று இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கால்வாய் பிரச்சினைகடனா நதி அணை மழை காலத்தில், குறைந்த நாட்களுக்குள் நிரம்பி விடுகிறது. அப்போது அந்த அணையின் கீழ் ஆற்றில் உள்ள 5 தடுப்பணைகளையும் தாண்டி தாமிரபரணி ஆற்றில் கலந்து வெள்ள நீராக கடலில் கலக்கிறது. எனவே இந்த கடனாநதி அணையின் உபரி நீரை மானூர் பெரிய குளத்துக்கு உயர் மட்ட கால்வாய் அமைத்து மானூர் பெரிய குளத்தை நிரம்ப செய்ய வேண்டும். இது சிற்றாறு கால்வாய் தண்ணீருடன், கூடுதலாக மானூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் வரத்தை கொடுக்கும்.
தற்போது உள்ள சிற்றாறு கால்வாய் தூர்ந்து போய், குளத்துக்கு தண்ணீர் வருவதற்கு வழியே இல்லாத நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மானூர் சுற்று வட்டார விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினார்கள். மானூர் பெரியகுளம் பாசன நில விவசாயிகள் நலச்சங்கமும் அமைத்து குளத்தின் மேம்பாட்டுக்கு முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கு துணையாக அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல அலுவலகமும் செயல்பட்டது. அதன் டீன் சத்திநாதன் தலைமையில் பொறியாளர்கள் குழுவினர் சிற்றாறு பாசன கால்வாயை முழுமையாக ஆய்வு செய்து, விஞ்ஞான ரீதியாக தூர்வாருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது நெல்லை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நயினார் நாகேந்திரன், இதற்காக ரூ.2.30 கோடி நிதி பெற்று கொடுத்தார். இதைக்கொண்டு ஓரளவுக்கு கால்வாய் தூர்வாரப்பட்டதுடன், மடைகளும் சீரமைக்கப்பட்டன. இதில் மாயமான்குறிச்சி தென்பக்கம் 2 இடங்களில் உள்ள பாறைகள் மட்டும் உடைக்கப்படாமல் விடுபட்டு போய் விட்டது. இது தொடர்ந்து தண்ணீர் வருவதற்கு தடையாகவே உள்ளது.
6 அடி உயரத்துக்கு மண்இத்தனையும் கடந்து இந்த குளத்துக்கு தண்ணீர் வந்து சேர்ந்தாலும், அந்த தண்ணீரை முழுமையாக சேமித்து வைக்க முடியாத அளவுக்கு புதிய பிரச்சினையும் விசுவரூபம் எடுத்துள்ளது. அதாவது இந்த குளம் 1,000 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படவில்லை என்பது பொதுப்பணித்துறை பொறியாளர்களின் கருத்தாக உள்ளது.
அதாவது இந்த குளத்தின் நீர்மட்ட உயரம் மொத்தம் 16 அடி ஆகும். ஆனால் தற்போது 10 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கும் நிலை உள்ளது. மீதி 6 அடி உயரத்துக்கு குளம் மண் மேடாகிப் போய் விட்டது.
தூர்வார வேண்டும்மானூர் பெரிய குளத்தை தூர்வார வேண்டுமென்றால் பல லட்சம் ரூபாய் செலவாகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே ஊரக வேலை திட்ட பயனாளிகளை முழுமையாக பயன்படுத்தி 6 அடிக்கு இந்த குளத்தை தூர்வார வேண்டும். இதுதவிர முதல்–அமைச்சர் தொடங்கி வைத்துள்ள குடி மராமத்து திட்டத்தில், இந்த குளத்தை சேர்த்து முழுமையாக குளத்தை ஆழப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் அரசால் செய்ய முடியாமல் போனால், குளத்தில் தனியார் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தாலே போதுமானது.
நெல்லை–சங்கரன்கோவில் ரோடு போடும் பணி, வீடு கட்டுமான பணிக்கு அடிமட்ட பகுதியை நிரப்புவதற்கு தேவையான மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்லும்போது குளம் தானாகவே ஆழப்படுத்தப்படும். அதையும் இந்த கோடை காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். எனவே மானூர் பெரிய குளத்தை தூர்வார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த பணியை மேற்கொண்டால் மானூர் பகுதியில் விவசாயம் செழிப்பதோடு, சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறையாமல் மக்கள் வாழ்வும் செழிக்கும். மானூர் குளத்தின் மீது உடனடியாக அதிகாரிகளின் பார்வை படுமா? விவசாயிகளின் வாட்டம் நீங்குமா?
பாண்டிய மன்னன் வெட்டிய குளம்ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்ற சீவலமாற பாண்டிய மன்னனால் 7–வது நூற்றாண்டு இறுதியில் தொடங்கி 8–ம் நூற்றாண்டு தொடக்கம் வரை இந்த குளம் வெட்டப்பட்டுள்ளது. இந்த குளத்தை மன்னன் வெட்டியதற்கான காரணமும் உள்ளது. அதாவது பாண்டிய மன்னனின் அரண்மனையில் இருந்த பசுக்களில் 2 பசுக்களுக்கு மட்டும் பால் இல்லாமல் போய் விட்டது. இதுகுறித்து மன்னன், மாடு மேய்த்த தொழிலாளியிடம் விளக்கம் கேட்டார். அப்போது அவர் ஏதோ கூறியதால் கோபம் அடைந்த மன்னர், அந்த மாடு மேய்ப்பவரை அடித்து விட்டார்.
இதனால் மனம் வெதும்பிய மாடு மேய்ப்பவர், சிவனை நோக்கி வணங்கினார். எந்த காரணமும் இன்றி மன்னர் தன்னை அடித்து விட்டதாக முறையிட்டார். இதையொட்டி சிவன், மாடு மேய்ப்பவருக்காக மனம் இரங்கி மன்னருக்கு கண் மற்றும் கைகள் செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டார். பின்னர் மன்னரின் கனவில் சிவன் காட்சி அளித்து பரிகாரமாக மானூருக்கு சென்று ஒரு கோவில் கட்டுமாறும், ஒரு குளம் வெட்டுமாறும் கூறினார்.
இதையடுத்து மன்னன் படை, பரிவாரங்களுடன் மானுருக்கு புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் ஓரிடத்தில் மன்னருக்கு ஒரு கண்ணும், ஒரு கையும் செயல்படத் தொடங்கியது. இதையடுத்து மன்னர் அங்கு ஒரு கோவிலை கட்டி அந்த பகுதிக்கு கங்கைகொண்டான் (கண்–கை கொண்டான்) என்று பெயரிட்டார். அதன் பிறகு அங்கிருந்து எறும்பு ஊர்ந்து சென்று நின்ற மானூர் என்ற இடத்தில் சிவனுக்கு ஒரு ஆலயத்தை கட்டினார். அதன் பிறகு இந்த பெரிய குளத்தை தோண்டினார்.
பள்ளமடை கிராமத்து மக்கள் இந்த குளத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவ்வாறு குளத்தை வெட்டுவதற்கு செல்லும்போதும், வரும்போதும் ஓரிடத்தில் தலா 2 கூடை மண் அள்ளி போட்டதன் மூலம் உருவானது பள்ளமடை குளம் ஆகும்.