சங்ககிரி வாணியர் காலணியில் கிணற்றை தூர்வாரும் போது உலோகத்தால் ஆன அர்த்தனாரீஸ்வரர் உருவசிலை கண்டுபிடிப்பு கருவூலத்தில் ஒப்படைப்பு
சங்ககிரியில் உள்ள வாணியர் காலணியில் கிணற்றை தூர்வாரும் போது உலோகத்தால் ஆன அர்த்தனாரீஸ்வரர் உருவசிலை கண்டுபிடிக்கப்பட்டது.
சங்ககிரி,
சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட வாணியர் காலனியில் அல்லி மாரியம்மன் கோவில் அருகே பழமை வாய்ந்த பொது கிணறு ஒன்று உள்ளது. ஆரம்பத்தில் இந்த கிணற்றில் உள்ள நீரை அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். பருவமழை பொய்த்து விட்டதால் இந்த கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை. இந்தநிலையில் பேரூராட்சி மூலம் நேற்று அந்த கிணற்றில் தூர்வாரும் பணி நடந்தது. இதில் 5–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மாலை 4.30 மணியளவில் பணியாளர்கள் தூர்வாரி கொண்டிருக்கும் போது சேற்றில் இருந்து ஒரு சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிலை வெளியே கொண்டு வரப்பட்டது. இதில் 1.75 அடி உயரம் கொண்ட உலோகத்தால் ஆன பழமையான அர்த்தனாரீஸ்வரர் உருவசிலை என்பது தெரியவந்தது.
கருவூலத்தில் ஒப்படைப்புஇதுகுறித்து தகவல் கிடைத்ததும் சங்ககிரி தாசில்தார் முத்துராஜா, சின்னாகவுண்டனு£ர் கிராம நிர்வாக அதிகாரி சதீஷ் பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த சிலையை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த சிலையை மீட்டு சங்ககிரி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த சிலையின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை. மேலும் இந்த சிலை எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பது குறித்தும், எந்த காலத்தில் செய்யப்பட்டது என்பது குறித்தும் தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர் தான் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.