கஞ்சா வியாபாரி தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்


கஞ்சா வியாபாரி தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 18 March 2017 3:45 AM IST (Updated: 18 March 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே கஞ்சா வியாபாரி தோட்டத்தில் இருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடமலைக்குண்டு

தேனி மாவட்டம் கடமலை–மயிலை ஒன்றியம் குமணன்தொழு பகுதியில் இருந்து கடமலைக்குண்டு வழியாக கேரள மாநிலத்துக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடமலைக்குண்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரில் கடத்தி வரப்பட்ட 38 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் காரில் வந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் குமணன்தொழு அருகே காமன்கல்லூர் கிராமத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி கீரிபட்டிமுருகன் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து கடமலைக்குண்டு போலீசார் காமன்கல்லூர் கீரிபட்டிமுருகன் வீட்டிற்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார். அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில் கஞ்சா எதுவும் சிக்கவில்லை.

220 கிலோ கஞ்சா

இந்த நிலையில் தனிப்படை போலீசார் காமன்கல்லூர் கிராமத்திற்கு சென்று கீரிபட்டிமுருகன் வீடு மற்றும் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தோட்டத்தில் பள்ளம் தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த 220 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக கீரிபட்டிமுருகன் (வயது 58) மீது மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையொட்டி அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தேனி அருகே தேவாரம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து மயிலாடும்பாறை போலீசில் ஒப்படைத்தனர்.

நாட்டு துப்பாக்கி பறிமுதல்

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவருடைய தோட்டத்தில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய தோட்டத்தில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி, அங்கு பதுக்கி வைத்து இருந்த ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி மற்றும் 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கீரிபட்டிமுருகன் மீது கடந்த ஆண்டு வெள்ளிமலை வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக மேகமலை வனச்சரகத்தில் வழக்கு உள்ளது. எனவே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி வந்துள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட கீரிபட்டிமுருகன் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடமலை–மயிலை ஒன்றியத்தில் வேறு யாரேனும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story