கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் சாலைமறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் 106 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று 4–வது நாளாக ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராமன் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கருணாகரன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து கூறியதாவது:–
உள்ளாட்சி தேர்தல்உள்ளாட்சி தேர்தலை மாநில அரசு உடனே நடத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி இயக்குபவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதோடு, குடும்ப பாதுகாப்பு நிதியும் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 106 பேரை போலீசார் கைது செய்தனர்.