ஊரக வளர்ச்சித்துறையினர் 4–வது நாளாக வேலை நிறுத்தம், 170 பேர் கைது
ஊரக வளர்ச்சித்துறையினர் 4–வது நாளாக வேலை நிறுத்தம்: சாலை மறியலில் ஈடுபட்ட 170 பேர் கைது
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 4–வது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.
4–வது நாளாக போராட்டம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14–ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 500–க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அலுவலர்கள் நாள்தோறும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 4–வது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லாததால் அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கின. போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று காலை திருப்பூரில் குமரன் சிலை அருகில் கூடினார்கள். அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
170 பேர் கைதுஇந்த சாலை மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜகோபால், மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 170 பேர் கைது செய்யப்பட்டு பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் ரெயில்வே நிலையம் முன்பு உள்ள ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எங்கள் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வருகிற திங்கட்கிழமை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.