உடுமலை மத்திய பஸ் நிலையம் பகுதியில் ரவுண்டானா அமைக்க கடைகள் இடித்து அகற்றம்


உடுமலை மத்திய பஸ் நிலையம் பகுதியில் ரவுண்டானா அமைக்க கடைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 18 March 2017 3:30 AM IST (Updated: 18 March 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை மத்திய பஸ் நிலையம் அண்ணா சிலை பகுதியில் ரவுண்டானா அமைக்க கடைகள், கழிவறை இடித்து அகற்றப்பட்டது

உடுமலை,

உடுமலை மத்திய பஸ்நிலையம் அண்ணா சிலை பகுதியில் ரவுண்டானா அமைக்கும் திட்டத்திற்காக அங்கிருந்த நகராட்சிக்கு சொந்தமான 2 கடைகள் மற்றும் கழிவறை ஆகியவை இடித்தும் அகற்றும் பணி நடைபெற்றது.

ரவுண்டானா அமைக்க திட்டம்

உடுமலை நகரில் பழனி சாலையில் நகராட்சி மத்திய பஸ்நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் கிழக்குப்பகுதியில் அண்ணா சிலை உள்ளது. இந்த சிலைக்கு கிழக்குப்புறம் நகராட்சிக்கு சொந்தமான 2 கடைகளும், அதன்பின்புறம் நகராட்சி சொந்தமான பொதுகழிவறையும் உள்ளன. இந்த கழிவறையின் மேற்கூரை ஒரு ஆண்டிற்கு முன்பு காற்றில் பறந்துவிட்ட நிலையில் மேற்கூரை இல்லாத நிலையில் கழிவறை செயல்பட்டு வந்தது.

போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் அண்ணா சிலை பகுதியில் ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்த 2 நகராட்சி கடைகள், மற்றும் கழிவறை ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. முதலில் அந்த பகுதியில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டு அங்கிருந்த மின் இணைப்புகள் மின் வாரிய உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் மின்பணியாளர்களால் துண்டிக்கப்பட்டன.

கடைகள், கழிவறை இடிப்பு

இதைத்தொடர்ந்து 2 நகராட்சி கடைகளும், கழிவறையும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி தொடங்கியது. இந்த பணி நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார் மேற்பார்வையில் நடந்தது. அப்போது நகராட்சி நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன், நகர் நல அலுவலர் கே.சி.அருண், மின் மேற்பார்வையாளர் சர்தார்கான், உதவிப்பொறியாளர் ஜான் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

பழனிசாலை (தானியங்கி சிக்னலின் கிழக்கு, மேற்கு பகுதிகள்) ராஜேந்திராசாலை, பைபாஸ் சாலை, அனு‌ஷம் சாலை, ஐஸ்வர்யாநகர் சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் இந்த ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது.


Next Story