குடிநீர் வினியோகம் செய்யும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி
திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டிருந்தார். இதை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை அடுத்து அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளை அதன் உரிமையாளர்கள் நிறுத்தி வைத்திருந்தனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வடிவேல் கூறியதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. குளம், குட்டைகள் வறண்டு கிடக்கிறது. இந்த நிலையில் தொழிற்சாலைகள், வீடுகள், வணிக வளாகங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் எங்களிடம் இருந்து தண்ணீரை வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர். தற்போது மாவட்ட நிர்வாகம் இதற்கு தடை விதித்துள்ளது.
எனவே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 2000–க்கும் மேற்பட்ட லாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம் வாபஸ்இந்த வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து திருப்பூர் சப்–கலெக்டர் ஷ்ரவன்குமார் லாரி உரிமையாளர்களை திருப்பூரில் உள்ள சப்–கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புகார் மனு ஒன்றையும் சப்–கலெக்டரிடம் லாரி உரிமையாளர்கள் கொடுத்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சாய, சலவை ஆலைகள் உள்ளிட்ட பெரிய வணிக நிறுவனங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதை முடிந்த வரை தவிர்த்து, வீடுகளுக்கு தேவையான குடிநீரை மட்டும் வினியோகித்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று சப்–கலெக்டர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவது என லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.